வந்தே பாரத் ரெயில் திண்டுக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை
வந்தே பாரத் ரெயில் திண்டுக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமருக்கு, வர்த்தக சங்கத்தினர் மனு அனுப்பி உள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடிக்கு திண்டுக்கல் வர்த்தகர் சங்கத்தினர் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில், ரெயில்வே துறையில் வந்தே பாரத் ரெயில்களை இயக்குவதால் மக்கள் பெருமைப்படுகின்றனர். எனவே வந்தே பாரத் ரெயிலால் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் ரெயில் நிறுத்தங்களை அமைக்க வேண்டியது அவசியம். இந்தநிலையில் விரைவில் இயக்கப்பட இருக்கும் நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயிலுக்கு திண்டுக்கல்லில் நிறுத்தம் இல்லை என்று கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட ஆன்மிக, சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் வெளிநாட்டினரும், வெளிமாநிலத்தவர்களும் அதிகம் வந்து செல்லும் ரெயில் நிலையமாக திண்டுக்கல் விளங்குகிறது.
இதுதவிர மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் செயல்படுகின்றன. எனவே வணிகம், தொழில் ரீதியாக ரெயிலில் பயணிக்கும் மக்கள் அதிகம் உள்ளனர். இதனால் திண்டுக்கல்லில் 90-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று சென்றாலும், மக்களுக்கு இடம் கிடைக்காத நிலை உள்ளது. எனவே வந்தே பாரத் ரெயில் திண்டுக்கல்லில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.