வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை-ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவர் சிவகுமார் பேச்சு

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நெல்லையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.

Update: 2023-09-08 19:17 GMT

"வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக" நெல்லையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.

கலந்தாய்வு கூட்டம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான சிவகுமார் தலைமையில், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணைய மண்டல விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

இதில் ஆணையத்தின் துணைத்தலைவர் புனித பாண்டியன், உறுப்பினர்கள் குமாரதேவன், லீலாவதி தனராஜ், இளஞ்செழியன், ரகுபதி, ரேகா பிரியதர்ஷினி மற்றும் ஆணைய உறுப்பினர் செயலாளர் கந்தசாமி, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள் தொடர்பாகவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அளித்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, வன்கொடுமை பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது பல்வேறு அமைப்பினர் சாதிய மோதல் குறித்தும், நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய சகோதரி தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் பேசினார்கள். மேலும் பலர் தங்கள் பகுதியில் நடைபெறும் சாதிய வன்கொடுமைகள் குறித்து மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு ரூ.31 லட்சம் நிவாரணத்தொகையை ஆணைய தலைவர் சிவகுமார் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

வன்முறை நிகழ்வுகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்போது ஆணையம் உரிய விசாரணை நடத்தி, அவர்களுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் மக்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா? என்பதையும் கண்காணிக்கும்.

வன்கொடுமை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு சரியான தீர்வு கிடைக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆணையம் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தீர்வை காண்பதும், மக்கள் பாதிக்கப்பட்டால் அது தொடர்பாக மனுக்கள் மூலமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ ஆணையம் விசாரணை செய்து அவர்களுக்கு தேவையான உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளும். வன்கொடுமை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தீர்வு காண்பதில் ஆணையம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, உதவி கலெக்டர்கள் முகமது சபீர் ஆலம், ஷேக் அயூப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அனிதா, மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்