இடைநின்ற 505 மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை-கலெக்டர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் இடைநின்ற 505 மாணவ-மாணவிகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.

Update: 2023-09-14 19:11 GMT

ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இடைநிற்றலால் பள்ளி செல்லா மாணவ-மாணவிகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக நேற்று முன்தினம் வேப்பூர், ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட தலைமையாசிரியர்களுடனும், கிராம நிர்வாக அலுவலர்களுடனும், நேற்று பெரம்பலூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுடனும் மாவட்ட கலெக்டர் கற்பகம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டங்களில் கலெக்டர் கற்பகம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வேப்பூர் ஒன்றியத்தில் 148 மாணவ-மாணவிகளும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 127 பேரும், பெரம்பலூர் ஒன்றியத்தில் 105 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 125 பேரும் என மொத்தம் 505 மாணவ-மாணவிகள் இடைநிற்றலால் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மீண்டும் பள்ளியில் சேர்க்க...

அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணியில் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் இணைந்து பணியாற்றிட வேண்டும். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உரிய வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. பொருளாதார காரணத்தால் ஒரு மாணவனோ, மாணவியோ பள்ளிக்கல்வியை கூட கற்க இயலவில்லை என்ற சூழ்நிலை நமது மாவட்டத்தில் இருக்க கூடாது.

பொருளாதார நிலைதான் அவர்கள் பள்ளி செல்ல தடையாக உள்ளது என்றால் மாணவர்களின் பெற்றோருக்கு அரசின் திட்டங்கள் மூலம் சுய தொழில் தொடங்கவோ, வேளாண் திட்டங்கள் மூலம் உதவிடவோ மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்பதே பெற்றோர்களுக்கு எடுத்து கூறுங்கள்.

10 நாட்களுக்குள்...

தினந்தோறும் எத்தனை மாணவரின் வீட்டிற்கு சென்றீர்கள், அந்த மாணவர் குறித்த தகவல் என்ன, எதனால் பள்ளிக்கு வரவில்லை, அவரை பள்ளிக்கு வரவைக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது குறித்த விரிவான அறிக்கை தினந்தோறும் எனக்கு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 10 நாட்களுக்குள் இடைநிற்றலால் பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்துவிட்டோம், இடைநிற்றலால் பள்ளி செல்லா மாணவர்களே பெரம்பலூர் மாவட்டத்தில் இல்லை என்ற நிலையினை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

7 வயதாகியும் பள்ளி செல்லாத சிறுவன்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கார்குடி கிழக்கு தெருவில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்த தம்பதிக்கு 7 வயதில் மகனும், 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் 7 வயதுடைய சிறுவன் இன்னும் பள்ளிக்கு செல்லவில்லையாம். அவனின் தாய், தாத்தா, அத்தையிடம் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் சிறுவனை பள்ளியில் சேர்க்காமல், அவனது தந்தை கூடவே வைத்து கொண்டு இருந்து வருகிறார். சிறுவனின் பெற்றோர் சரியாக படிக்கவில்லை, பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று தாய் ஆசைப்படுகிறார். ஆனால் தந்தையின் செயலால் அச்சிறுவன் பள்ளி படிப்பை தொடர முடியாமல் இருக்கிறார். சிறுவனை பள்ளியில் சேர்க்க கூறுபவர்களை அவர் தகாத வார்த்தையால் திட்டி வருகிறாராம். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்தும் சிறுவனை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இது தொடா்பாக மாவட்ட கலெக்டர் அச்சிறுவனை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்