வரைபடத்தில் விடுபட்ட மீனவ கிராமங்களை இணைக்க நடவடிக்கை

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்டுள்ள வரைபடத்தில் விடுபட்ட மீனவ கிராமங்கள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-07 18:45 GMT

மத்திய மந்திரிகள்

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சென்று ஆய்வு மேற்கொள்வதற்காகவும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கிடவும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல். முருகன் ஆகியோர் நேற்று நாகை மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.

வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது மீனவர்களின் குடிசை வீட்டின் வாசலில் அமர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மத்திய மந்திரிகள் கேட்டறிந்தனர்.

மீனவர்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி

இதைத்தொடர்ந்து நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடந்த மீனவர்களின் குறை கேட்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இதில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மீனவர்களிடம் விளக்கி கூறினர். அதைத்தொடர்ந்து மீனவ மகளிருக்கு விவசாய கடன் அட்டைகளையும், ரூ.84 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவிகளையும் வழங்கினர்.

தொடர்ந்து மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசியதாவது:-

மத்திய அரசின் மீன்வளத்துறையின் மூலம் பயன்பெற்றவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மீனவர்கள், மத்திய மந்திரி எல்.முருகனை தொடர்பு கொண்டு குறைகள், கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அதை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுபட்ட மீனவ கிராமங்கள்

மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்டுள்ள வரைப்படத்தில் பாரம்பரிய மீனவ கிராமங்கள் விடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களை இணைக்க அரசுத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காணப்படும்.கிசான் கிரடிட் கார்டு பெற 3 ஆயிரத்து 84 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 900 பேருக்கு அட்டைகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என்றார்.

5 ஆயிரம் கிலோமீட்டர் பயணம்

நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசுகையில்:- பிரதமர் நரேந்திரமோடி வழிகாட்டுதலின்பேரில், கடல் மார்க்கமாக மீனவ மக்களை சந்திக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், இந்த பயணம் குஜராத்தில் தொடங்கப்பட்டது. சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது.தஞ்சை, புதுக்கோட்டை, ரமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆழ்கடலில் மீன்பிடிக்க ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் படகுகள் 60 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. . மீனவர்கள் நலன் காக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது.

மீன் ஏற்றுமதியில் 4-வது இடம்

மீனவர்களுக்காக ரூ.38 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மீன் ஏற்றுமதியில் உலகத்திலேயே 4-வது இடத்தில் உள்ளோம். நாகை துறைமுகத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதில் மத்திய மீன்வளத்துறை இணைச் செயலாளர், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய தலைமை நிர்வாக அதிகாரி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர், உதவி இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

.

Tags:    

மேலும் செய்திகள்