சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சிதம்பரம் கோவிலில் அதிகார மையமாக தீட்சிதர்கள் செயல்படுகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Update: 2023-06-27 07:25 GMT

சென்னை,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயம் பொற்சபையாகவும் போற்றப்படுகிறது.

நடராஜர் நடனம் புரிந்த ஐந்து திருத்தலங்கள் பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலேயே பஞ்ச சபைகள் இருக்கின்றன. சிற்றம் பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, ராஜசபை என்று அழைக்கப்படும். சிற்றம்பலம் என்பது நடராஜர் ஆடும் சித்சபையைத்தான் 'சிற்றம்பலம்' என்கிறோம். இங்கு நடராஜர் ஆடும் நடனத்தை, சிவகாமி அம்மை எப்போதும் கண்டு ரசித்தபடி இருக்கிறார். இதற்கு தப்ர சபா என்ற பெயரும் உண்டு. இந்த சபைக்கு இரண்யவர்மன் என்ற மன்னன் பொன் கூரை வேய்ந்தான். இங்குள்ள படிகள் பஞ்சாட்சர படிகள் என்றும், நமசிவாய படிகள் என்றும் போற்றப்படுகின்றன.

சிற்றம்பலத்திற்கு முன்பாக உள்ளது பொன்னம்பலம். இதனை 'கனகசபை' என்றும் அழைப்பர். இங்குதான் நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜையும், ரத்தினசபாபதிக்கு அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து பேரம்பலம் இந்த இடத்திற்கு 'தேவசபை' என்றும் பெயர். விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமி அம்மை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளும் சபை இதுவாகும். இந்த சபைக்கு, மூன்றாம் குலோத்துங்கன் என்ற மன்னன் பொன் கூரை வேய்ந்துள்ளான்.

நிருத்தசபை என்பது நடராஜருக்குரிய கொடிமரத்தின் தெற்கே அமைந்திருக்கிறது. இங்கு நடராஜர், ஊர்த்துவ தாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார். ராஜசபை என்பது சிதம்பரம் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம்தான், ராஜ சபை ஆகும். ஆனி மற்றும் மார்கழி மாதத்தில் நடக்கும் விழாவில், தேரில் பவனி வரும் நடராஜர், இந்த ராஜசபைக்கு எழுந்தருள்வார். ஆருத்ரா தரிசனம் இங்குதான் நடைபெறும். அப்போது சிவகாமியம்மன் முன்பாக நடராஜர் முன்னும், பின்னுமாக நடனமாடி தரிசனம் தருவார். இதற்கு 'அனுக்கிரக தரிசனம்' என்று பெயர். நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதியளித்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பல நேரங்களில் தீட்சிதர்கள் அனுமதி வழங்குவதில்லை என புகார் எழுந்தவண்ணம் இருக்கிறது. நேற்று நடராஜர் கோவிலில் பக்தர்கள் நான்கு நாட்கள் கனகசபை மீது ஏற கூடாது என அறிவிப்பு பலகை வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கோவிலுக்கு வந்த இந்துசமய அறநிலையத்துறை செயலர் சரண்யா, தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையை அகற்ற முயன்றபோது, மிரட்டும் பாணியில் நடந்து கொண்டதாகவும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் அனுமதி பலகையை அகற்ற முயலும்போதும் பனி செய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது, உதவி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தீட்சிதர்கள் என்றாலே பிரச்சினை தான், சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி செயல்படுகிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். ஒட்டுமொத்த பக்தர்களும் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்