மீனவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை சட்டப்பேரவை பொது கணக்கு குழு தகவல்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் தெரிவித்தனர்.

Update: 2022-06-28 19:56 GMT

நாகர்கோவில்,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் தெரிவித்தனர்.

பொது கணக்கு குழு ஆய்வு

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு அதன் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டத்திற்கு வந்தது. அந்த குழுவில் உறுப்பினர்கள் காந்திராஜன், கார்த்திகேயன், சிந்தனை செல்வன், வேல்முருகன், சட்டப்பேரவை சிறப்பு அலுவலர் ராஜா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் நேற்று கலெக்டர் அரவிந்துடன் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதளம், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, குளச்சல் மீன்பிடி துறைமுகம் மற்றும் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு குறித்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுத்தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு சார்பில் குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆயுர்வேத ஆஸ்பத்திரி

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்காக ரூ.8 கோடி மதிப்பில் 2 படகுகள் வாங்கப்பட்டது. அது 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கிறது. அதையும் ஆய்வு செய்தோம். தமிழகத்தில் ஒரே ஒரு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கோட்டாரில் இருக்கிறது. இந்த மருத்துவமனையில் ஏறக்குறைய 100 படுக்கை வசதிகள் இருக்கின்றன. ஆனால் போதிய செவிலியர்கள், மருத்துவர்கள் இல்லை. இன்னும் 200 படுக்கை வசதிகள் வேண்டுமென்று கோரிக்கையும் வைத்துள்ளார்கள். அதனை பரிந்துரை செய்ய இருக்கிறோம்.

குளச்சல் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஒருசில குறைபாடுகள் இருக்கிறது. அக்குறைகளை சரிசெய்ய பரிந்துரை செய்ய இருக்கிறோம். தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் தொடர்ந்து மீனவர்கள் இறப்புக்குள்ளாகி உள்ளனர். தேங்காப்பட்டணம் துறைமுகம் பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை பெறப்பட்டு கட்டியிருந்தாலும், உள்ளூர் மீனவர்களிடம் கருத்துகேட்டு கட்டப்பட்டிருந்தால் குறைபாடுகள் இருந்திருக்காது.

மீனவர்கள் பாதிக்காத வகையில்...

இனிமேல் எந்த மீனவர்களும் பாதிக்காத வகையில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு நிபந்தனைகளுடன் சில வழிகாட்டுதல்களை துறைசார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, சட்டப்பேரவை சார்பு செயலாளர் பாலசீனிவாசன், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் கிளாரன்ஸ் டேவி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன், டி.டி.டி.சி. மேலாளர் யுவராஜ், தலைமை பொறியாளர் ஸ்ரீனிவாசன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக குளச்சல் மீன்பிடித்துறைமுகத்துக்கு வந்த இந்த குழுவினர் குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நல சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதில் கல்குளம் தாசில்தார் வினோத், குளச்சல் விசைப்படகு சங்க தலைவர் பிரான்சிஸ், செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் அந்திரியாஸ் மற்றும் மீன்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது விசைப்படகு சங்க நிர்வாகிகள், குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் மேற்கில் இருந்து கிழக்காக 600 மீட்டர் நீட்டித்து துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடித்தொழில் செய்யும் 75 அடி முதல் 120 அடி நீளமுள்ள விசைப்படகுகளை மீன் வளத்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு மீனவர்களின் கோரிக்கைகளை அரசிடம் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என குழுவினர் உறுதியளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்