ஊரக, பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை கலெக்டர் தகவல்
கடலூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடை நிற்றலை தவிர்க்கவும் முதற்கட்டமாக மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதி பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மையக்குழு அமைப்பு
அதாவது திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஊரகம், பேரூராட்சி முதன்மை குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுய உதவிகுழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் காலை உணவு சமைத்தல் பணி மேற்கொள்ளப்படும். மையக்குழு அமைக்கப்படும். அதில் தலைவராக ஊராட்சி மன்ற தலைவரும், கூட்ட அழைப்பாளராக தலைமை ஆசிரியரும், பள்ளி மேலாண்மை குழு தலைவர், ஒரு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுவர்.
இந்த ஊராட்சி மற்றும் பேரூராட்சி மையக்குழு யாருடைய நிர்பந்தம் மற்றும் சிபாரிசும் இல்லாமல் கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 3 நபர்களால் தேர்வு செய்ய வேண்டும். அதன்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டு குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் அனுபவமுள்ள சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
10-ம் வகுப்பு தகுதி
தேர்வு செய்யப்படும் சமையல் மைய பொறுப்பாளர் அதே கிராம ஊராட்சி, நகர்புற பகுதியில் வசிப்பிடம் கொண்டவராக இருத்தல் வேண்டும். மகளிர் உறுப்பினர் காலை உணவு தயாரிப்பதற்கும் பரிமாறுதலுக்கும் தேவையான அடிப்படை அறிவை பெற்றிருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்போன் வைத்திருக்க வேண்டும்.
தற்காலிக சமையல் மைய பொறுப்பாளரின் குழந்தை அப்பள்ளியில் படிக்க வேண்டும். குழந்தை பள்ளியில் இருந்து 5-ம் வகுப்பு படித்து முடிக்கும் பட்சத்தில் குழந்தையின் தாய் தற்காலிக சமையல் மைய பொறுப்பாளர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, பள்ளியில் பயிலும் வேறு குழந்தையின் தாய் தற்காலிகமாக மையக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
தற்காலிக பணி
கடந்த 3 ஆண்டுகளில் சுய உதவிக்குழுக்களின் மூலம் வங்கியில் பெற்ற கடனை தவணை தவறாது நிலுவையின்றி திரும்ப செலுத்தி இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட சுய உதவிக்குழுவில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த போதுமான நிதி மற்றும் நிதி மூலதனத்தை பெற்றிருத்தல் வேண்டும். இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது ஆகும். இந்த காலை சிற்றுண்டி பள்ளி வேலை நாட்களில் காலை 8.15 முதல் 8.50 மணிக்குள் வழங்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தகவல் கடலூா் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.