கர்நாடக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நாமக்கல் டிரைவரின் உடலை நாமக்கல் கொண்டு வர நடவடிக்கை

கர்நாடக நிலச்சரிவில் சிக்கி நாமக்கல் டிரைவர் உயிரிழந்தார்.;

Update: 2024-07-26 13:51 GMT

நாமக்கல்,

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகா சிரூரில் கடந்த 16-ந் தேதி கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கங்கவாலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளும், அதன் டிரைவர்களும் சிக்கி கொண்டனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி நாமக்கல் அருகே உள்ள தாத்தையங்கார்பட்டியை சேர்ந்த டிரைவர் சின்னு என்கிற சின்னண்ணன் (வயது55), கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியை சேர்ந்த டிரைவர் முருகன் (45) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த நிலச்சரிவில் நாமக்கல் அருகே உள்ள கரையான்புதூரை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் சரவணன் (34) என்பவரும் சிக்கி உயிரிழந்தார். சரவணின் உடலை மீட்புக்குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இருப்பினும் 11 நாட்கள் ஆகியும் டிரைவர் சரவணனின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கடும் வேதனையில் உள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஓட்டுநர் சரவணனின் உடலை நாமக்கல் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சரவணனின் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருவதாகவும் வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 16-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக டேங்கர் லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேரில் சின்னண்ணன், கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகனின் உடல்கள் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்