வெளிநாட்டில் இருந்து ஆதிச்சநல்லூர் பொருட்களை மீட்டு கொண்டுவர நடவடிக்கை -கனிமொழி எம்.பி. பேட்டி
வெளிநாட்டில் இருந்து ஆதிச்சநல்லூர் பொருட்களை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும், என கனிமொழி எம்.பி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட நேற்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி சென்றார். அவர் முதலில் சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வந்தார்.
தாமிரபரணி நதிக்கரையோரம் பாண்டியராஜா கோவில் அருகே நடைபெறும் அகழாய்வு பணிகள், அதில் கிடைத்த முதுமக்கள் தாழிகள், தங்கப்பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து சிவகளையில் அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் தலைமையிலான ஆய்வாளர்கள் அவருக்கு விளக்கமளித்தனர்.
ஆதிச்சநல்லூர்
அங்கிருந்து ஆதிச்சநல்லூர் சென்ற கனிமொழி குழியில் கிடைத்த பொருட்களையும், ஆய்வுக்குழிகளையும் பார்வையிட்டார். அங்கு தங்கம் கிடைத்த குழிக்குள் ஏணி வழியாக அவர் இறங்கி அங்கே கிடைத்த வெண்கல பொருட்கள், வாள் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெளிநாடுகளில் பொருட்கள்
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் மற்றும் காதணி கண்டுபிடிக்கப்பட்டது, முக்கியமான கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 145 வருடங்களுக்கு முன்பு ஜெர்மன் பெர்லின் நகர் உள்பட வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆதிச்சநல்லூர் பொருட்களை கண்டுபிடித்து அதை கொண்டு வந்து ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். நான் அதற்கான கடிதம் அளிப்பேன். தொடர்ந்து அந்த பொருட்களை மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.