மதுரை மண்டலத்தில் சுதந்திர தின விடுமுறை அளிக்காத 255 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மதுரை மண்டலத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 255 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-08-16 20:40 GMT


மதுரை மண்டலத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 255 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொழிலாளர் துறை

தமிழக தொழிலாளர் கமிஷனர் அதுல்ஆனந்த் உத்தரவின் பேரில், சுதந்திர தின விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரை மண்டல இணை கமிஷனர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின் பேரில், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர்கள் தலைமையில் நடந்த இந்த ஆய்வில், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றின்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விதிமீறல்

அதாவது, சுதந்திர தினத்தன்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையெனில் 2 மடங்கு சம்பளமோ, மாற்று விடுமுறையோ அளிக்க வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரம் முன்னதாக அதற்குரிய படிவங்களை தொழிலாளர் துறையில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காத மற்றும் சமர்ப்பித்த ஒரு சில நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, மதுரை மாவட்டத்தில் 49 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 42 உணவு நிறுவனங்கள், 2 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 93 நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் 50 கடைகள், வணிக நிறுவனங்கள், 24 ஓட்டல்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 84 நிறுவனங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 கடைகள், 18 உணவகங்கள், 2 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 31 நிறுவனங்களும், சிவகங்கை மாவட்டத்தில் 21 கடைகள், 23 ஓட்டல்கள், இனிப்பகங்கள், 3 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 47 நிறுவனங்களும் விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

மதுரை மண்டலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 356 நிறுவனங்களில் 255 நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் விடுமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் துறையினர் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்