தூத்துக்குடி மாவட்டத்தில் பொட்டல பொருட்கள் விதிகளை பின்பற்றாத 12 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் பொட்டல பொருட்கள் விதிகளை பின்பற்றாத 12 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-12 16:23 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பொட்டல பொருட்கள் விதிகளை பின்பற்றாத 12 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திடீர் ஆய்வு

தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தலைமையில் துணை ஆய்வாளர்கள் ஆறுமுகம், ராம்மோகன், உதவி ஆய்வாளர்கள் பெ.சூரியன், ல.சு.சங்கரகோமதி, ந.பாலசுப்பிரமணியன், முத்திரை ஆய்வாளர்கள் சமுத்திரவேலு, ஜெனட் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மீன்மார்க்கெட், இறைச்சி கடைகளில் கூட்டாய்வு நடத்தினர். அப்போது, மறு முத்திரையிடப்படாத 6 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நடவடிக்கை

பொட்டல பொருட்கள் விதிகளை பின்பற்றாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பொட்டல பொருட்கள் கைப்பற்றப்பட்டு 12 கடை மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்த 2 கடைகள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு பொட்டல பொருளிலும் அதன் தயாரிப்பாளர் பெயர், முழு முகவரி, பொருளின் பெயர், தயாரித்த மாதம், வருடம், அதன் எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஆகிய குறிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது.

புகார்

நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் எடையளவு கருவிகளை உரியவாறு பரிசீலனை செய்து சான்று பெற வேண்டும். அவ்வாறு சான்று பெறாத நிறுவனங்கள் மீது சட்டப்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிதிகளை மீறும் நிறுவனங்கள் தொடர்பான புகார்களை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தின் 0461-2340443 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்