வீட்டைவிட்டு விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
நகை, பணத்தை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பத்தூரில் நடந்த மக்கள்குறைதீர்வு கூட்டத்தில் ஒரு பெண் மனு அளித்தார்.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தநிலையில் சாமி வீதி உலா வரும் வழியில் ஆம்பூர்- பேரணாம்பட்டு பிரதான சாலையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி வளாகத்தில் தேவாலயம் கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தேவாலயம் கட்டும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பத்தூரை அடுத்த சின்ன வெங்காயபள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி மலர் அளித்த மனுவில், எனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு, என்னை பார்த்துக் கொள்வதாக கூறி எனது மகன் என்னிடம் இருந்த 9 பவுன் நகைகள் மற்றும் ரூ.3½ லட்சம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டார். எனவே என் மகன் மீது நடவடிக்கை எடுத்து எனது நகை மற்றும் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கூறியிருந்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி, கலால் உதவி ஆணையர் பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.