ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
வீடு கட்ட வரைபட அனுமதி, குடிநீர் இணைப்பு கொடுக்க லஞ்சம் கேட்பதாக ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் வார்டு உறுப்பினர்கள் புகார் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனுக்களை கொடுத்தனர்.
அடியனூத்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் லாசர், விஜி வாரணசி உள்பட 4 உறுப்பினர்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், அடியனூத்து ஊராட்சி பகுதியில் வீடு கட்ட விண்ணப்பிப்பவர்களிடம் வரைபட அனுமதி, குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் ஊராட்சி நிர்வாகத்துக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்.
மேலும் வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் விதிமீறலும் நடக்கிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கருப்புக்கொடி
இதேபோல் குஜிலியம்பாறை தாலுகா கோட்டாநத்தம் கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், கோட்டாநத்தம் கிராமம் ஆதிபுரத்தில் சமுதாய கூடம் இல்லை. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆதிபுரத்தில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.பா.ஜ.க. இளைஞரணி மாவட்ட தலைவர் அன்பு ஹரிகரன் சார்பில் கொடுத்த மனுவில், தாடிக்கொம்புவில் செயல்படும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கொசவப்பட்டியை சேர்ந்த தாமஸ் அந்தோணி என்பவர் கொடுத்த மனுவில், கொசவப்பட்டி காய்கறி மார்க்கெட் அருகே சாலையில் வேகத்தடை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
நலத்திட்ட உதவிகள்
மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 180 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து முதியோர் உதவித்தொகை, சிறுதொழில் தொடங்க கடனுதவி என மொத்தம் 53 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.