மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்வு நாள் கூட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 382 மனுக்கள் அளிக்கப்பட்டது.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மணல் கடத்தல்
கூட்டத்தில் குரிசிலாப்பட்டு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சண்முகம் அளித்த மனுவில், குரிசிலாப்பட்டு ஊராட்சி, தளுகன்வட்டம் பகுதியில் கடந்த 2-ந் தேதி இரவு மணல் கடத்தப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தோம். அதன்பேரில், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு பொக்லைன் எந்திரம் மற்றும் 7 டிராக்டர்களை கைப்பற்றினர்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் வாகனங்களை ஒப்படைத்து, மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் ஒரு பொக்லைன் மற்றும் 5 டிராக்டர்களை அங்கிருந்து விடுவித்தனர்.
நடவடிக்கை
2 டிராக்டர்களை மட்டுமே போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்றதும், ஒரு டிராக்டரை மட்டும் வைத்துக்கொண்டு மற்றொரு டிராக்டரையும் விடுவித்து விட்டனர். மணல் திருட்டை தடுக்க வேண்டிய அதிகாரியே அதை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட தாட்கோ மேலாளர் ராஜஸ்ரீ, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.