அதிக விலைக்கு உரங்களை விற்றால் நடவடிக்கை-மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
அரியலூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரங்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
உரங்கள் விற்பனை
அரியலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 1,339 டன் யூரியா, 856 டன் டி.ஏ.பி., 624 டன் பொட்டாஷ், 2,411 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 356 டன்கள் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் செப்டம்பர் மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட யூரியா உரம் 2,460 மெட்ரிக் டன்களில் இதுவரை 1,440 டன்கள் வந்துள்ளன.
இதுவரை யூரியா 1,057 மெ.டன்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மாதம் 1,000 மெ.டன்கள் கூடுதலாக பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உரிமம் ரத்து
உயிர் உரங்களான அசோஸ் பயிரிளம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் பொட்டாஷ் பாக்டீரியா இவைகள் அனைத்தும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் அதிகளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது.
மேலும் உரங்களை வெளி மாவட்டங்களில் இருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது. விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாகவும் மற்றும் இணை உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிகளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும்.
ஆதார் அட்டை...
விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது. திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும். விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் பெற்றுக் கொண்டு உரிய பட்டியல் கேட்டு பெற வேண்டும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிக பட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வேளாண்மை உதவி இயக்குனரை (தரக்கட்டுப்பாடு) 9487073705 என்ற செல்போன் எண்ணிலும், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை 9443180884 (அரியலூர்), 9443674577 (திருமானூர்), 9884632588 (செந்துறை), 9750890874 (ஜெயங்கொண்டம்), 9486164271 (ஆண்டிமடம்), 8248928648 (தா.பழூர்) ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.