பால் வணிகர்கள் மீது நடவடிக்கை

தரமற்ற ஊற்றல் அளவுகளை பயன்படுத்திய பால் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-25 19:49 GMT


தரமற்ற ஊற்றல் அளவுகளை பயன்படுத்திய பால் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கூட்டு ஆய்வு

பால் வியாபாரிகள் தரமற்ற ஊற்றல் அளவுகளை உபயோகப்படுத்துவதாக புகார்கள் வந்தன. அதனைத்தொடர்ந்து விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) மைவிழி செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் ராஜபாளையம் பகுதிகளில் உள்ள பஞ்சு மார்க்கெட், ெரயில்வே ஸ்டேஷன் ரோடு, விருதுநகர் பகுதியில் உள்ள சூலக்கரை, முத்துராமன்பட்டி, அல்லம்பட்டி, பாண்டியன் நகர் ஆகிய இடங்களில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

எடை அளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி வந்த வணிகர் மீதும், எடை அளவுகளை மறு முத்திரையிடப்பட்டதற்கான சான்றிதழ் பார்க்கும் வண்ணம் வைக்காத ஒரு வணிகர் மீதும் சட்டமுறை எடையளவு சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

6 மாதம் ஜெயில்

உரிமம் பெறாமல் பால் பொருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்ததாக ஒரு வணிகர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மறு முத்திரையிடாத 18 ஊற்றல் அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊற்றல்அளவைகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்திரையிடப்பட வேண்டும்.

எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களுக்கு 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் முதல் குற்றச்சாட்டிற்கு ரூ. 25 ஆயிரம்வரை அபராதமும், 2-வது மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதமும் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

புகார் தெரிவிக்கலாம்

நுகர்வோர் எடை குறைபாடுகள் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 225130 என்ற டெலிபோன்மூலமோ தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம், கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம்.

மேற்படி கூட்டு ஆய்வினை விருதுநகர் தொழிலாளர் துணை ஆய்வர் சதாசிவம், தொழிலாளர் உதவி ஆய்வர்கள் தயாநிதி, வாசுதுர்கா, பிச்சைக்கனி ஆகியோர் மேற்கொண்டனர். இந்த கூட்டாய்வு நடவடிக்கைகள் தொடரும். மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழி செல்வி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்