உரிமம் புதுப்பிக்காத உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உரிமம் புதுப்பிக்காத உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-31 18:28 GMT

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உரிமம் புதுப்பிக்காத உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

உரிமம் புதுப்பிக்க வேண்டும்

உணவு பொருட்கள் விற்பனை செய்யும் ஓட்டல்கள், தள்ளுவண்டி உணவகங்கள், பேக்கரிகள், தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட உணவு பொருள் விற்பனை சார்ந்த அனைத்து வகையான நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அந்த உரிமம் காலாவதியாகும் போது அதை புதுப்பிக்க வேண்டும்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தம் 24,580 உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 19,130 நிறுவனத்தினர் தங்களது உரிமத்தை புதுப்பித்துள்ளனர். புதுப்பிக்காதவர்கள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:-

ஆண்டு தணிக்கை அறிக்கை

உணவு நிறுவனங்கள் நடத்துவதற்கு முறையாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்வது சட்டப்படி தவறாகும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 24,580 கடைகளில் 5450 கடைகள் உரிமத்தை புதுப்பிக்கவில்லை. அவர்கள் foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் சென்று புதுப்பிக்க வேண்டும். அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விரைவில் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டு தணிக்கை அறிக்கையும் அந்த இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உரிமத்தை புதுப்பிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்