ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை

நிர்ணயித்த தூரத்தை தாண்டி பயணிகளை அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-25 18:45 GMT

ஊட்டி

நிர்ணயித்த தூரத்தை தாண்டி பயணிகளை அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

நீலகிரி மாவட்ட சுற்றுலா வாடகை வாகன ஓட்டுனர்கள் நல சங்கத்தினர், ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை தான் எங்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரமாகும். அப்படி இருக்கும் சூழ்நிலையில், மாவட்டத்தில் உள்ள ஆட்டோக்கள் 15 கிலோ மீட்டர் தூரம் வரை தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால் இங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் அனுமதிக்கப்பட்ட தூரத்தை தாண்டி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் அழைத்து செல்கின்றனர். இதனால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க வலியுறுத்தி கடந்த 2 வாரத்திற்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி ஊட்டியை சேர்ந்த 2 ஆட்டோ டிரைவர்கள் குன்னூர் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றனர். அந்த ஆட்டோக்களை புகைப்படம் எடுத்து வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பி வைத்தோம். பின்னர் மேல் குன்னூர் போலீசார் மூலம் அந்த 2 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டது.

உடனே குன்னூர் மற்றும் ஊட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் படம் எடுத்த சுற்றுலா வாகன டிரைவர்களை தகாத வார்த்தைகளில் திட்டி, தாக்க முயற்சி செய்தனர். எனவே நீலகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தூரம் மட்டும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆட்டோக்களை ஓட்ட டிரைவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.அவ்வாறு விதிமுறைகளை மீறி இயங்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்