பதிவு செய்யாமல் சீட்டு நடத்தினால் நடவடிக்கை

நகை, பணம் சேமிப்பு என்ற பெயரில் பதிவு செய்யாமல் சீட்டு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

Update: 2023-04-11 18:45 GMT

நகை, பணம் சேமிப்பு என்ற பெயரில் பதிவு செய்யாமல் சீட்டு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பதிவு பெறாமல் நடத்தக்கூடாது

கோவை மாநகரில் நகை சீட்டு, மாத சீட்டு என்ற பெயரில் பதிவு செய்யாமல் சீட்டு நடத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இது போன்ற சீட்டுகளில் பொதுமக்கள் சேர வேண்டாம். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் பேரில் பதிவு செய்த நிறுவனங்கள் மட்டுமே சீட்டுகளை நடத்த வேண்டும்.

பதிவுச்சான்று பெறாமல் யார் சீட்டு நடத்தினாலும் அது விதி மீறல்தான். இது போன்று சீட்டு நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

சரி பார்க்க வேண்டும்

கோடை கால விடுமுறை விடப்படும் நிலையில், பொதுமக்கள் வீடுகளை பூட்டிவிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும்போது அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும்.

வீட்டுக்குள் விலைமதிப்புள்ள நகை, பணத்தை வைத்துவிட்டு செல்ல வேண்டாம். மேலும் வீட்டில் கண்காணிப்பு கேமராக்க ளை பொருத்தி இருப்பதுடன், அது செயல்படுகிறதா? என்பதை யும் அடிக்கடி சரி பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுபுகுந்து திருடும் குற்றங்களை தடுக்க, இரவு ரோந்து தீவிரப்படுத்தப்படும்.

போக்குவரத்து விதிகள்

இருசக்கர வாகனங்களில் சாவியை வைத்து விட்டு செல்வது திருடுவதற்கு வசதியாக போய்விடுகிறது. எனவே இருசக்கர வாகனங்களில் சாவியை வைத்துவிட்டு செல்லாமல், பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

கார் போன்ற வாகனங்களில் மொபைல் போனில் பேசியபடியே ஓட்டுவதால் விபத்துகள் நடைபெறுகிறது. எனவே போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்