தனியார் வாகனங்களில் துறை ரீதியான ஸ்டிக்கர் இருந்தால் நடவடிக்கை

திருக்கோவிலூர் பகுதியில் தனியார் வாகனங்களில் துறை ரீதியான ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தெரிவித்தார்.

Update: 2023-09-06 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர்  துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார்  நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டத்துக்கு புறம்பானது

திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் போலீஸ், பிரஸ், வக்கீல் மற்றும் அரசு துறையின் கீழ் பணியாற்றுபவர்கள் அந்தந்த துறையின் லோகோ ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துகளை ஒட்டி உள்ளனர். இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானதாகும். அரசு வாகனங்களில் மட்டுமே அந்தந்த துறையின் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம். தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட கண்டிப்பாக அனுமதி கிடையாது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றமும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது.

ஒத்துழைப்பு தர வேண்டும்

எனவே திருக்கோவிலூர் பகுதியில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தங்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கர்களை உடனடியாக தாங்களாகவே அகற்றிக் கொண்டு நம்பர் பிளேட்டுகளில் அரசு அறிவித்துள்ளபடி நம்பர் இருக்கும்படி செய்ய வேண்டும்.

இந்தப்பணியை 2 வார காலத்திற்குள் முடித்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லை என்றால் வருகிற 20-ந் தேதி முதல் வாகன சோதனை நடத்தி சட்டத்துக்கு புறம்பாக ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் வாகனங்களை நிறுத்தி அதில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்றும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபடுவார்கள். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்டவாறு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்