போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர் சாருஸ்ரீ, போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2023-05-26 18:45 GMT

திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர் சாருஸ்ரீ, போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டத்தில் உள்ள 70 தனியார் பள்ளிகளை சேர்ந்த 283 வாகனங்களை கலெக்டர் சாருஸ்ரீ, போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, அவசரகால வழி உள்ளதா?, முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா?, வாகனத்தின் கதவுகள், தாழ்ப்பாள்கள் சரியாக உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

12 பஸ்கள் தகுதி நீக்கம்

மேலும் பள்ளி வாகன டிரைவர்களுக்கு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் 12 பஸ்களை தகுதி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன் பின்னர் கலெக்டர் சாருஸ்ரீ கூறியிருப்பதாவது:- பள்ளி வாகனங்களில், விதிமுறைகள் படி கேமரா, ஜி.பி.எஸ். பின்புறம் கேமரா ஆகியவை இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத வாகனங்களை 30-ந் தேதிக்குள் சரி செய்து கொள்ள வேண்டும்.

தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள் கண்டிப்பாக காக்கி சீருடை அணிய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் தொடர்ந்து சோதனைக்கு உட்பட்டு சரிவர விதிகளை பின்பற்றாத வாகனங்கள் வருகிற 30-ந் தேதிக்குள் சரி செய்து கொண்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை

மறு ஆய்வில் மேலும் குறைகள் கண்டறியப்பட்டால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்துகள் அதிகரித்துள்ளது. விபத்துகளை குறைக்கும் வகையில், போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியம், கருப்பண்ணன், அசோக் குமார், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் இளஞ்செழியன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்