கோர்ட்டு உத்தரவை பின்பற்றாததால் நடவடிக்கை: கல்வி அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு - 20-ந்தேதி ஆஜர்படுத்த போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கோர்ட்டு உத்தரவை பின்பற்றாத முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-01-07 20:08 GMT


கோர்ட்டு உத்தரவை பின்பற்றாத முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் வழக்கு

தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்லின் ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பி.ஏ. ஆங்கில பிரிவில் பட்டப்படிப்பை கடந்த 2008-ம் ஆண்டில் முடித்தேன். பின்னர் 2012-ம் ஆண்டில் பி.எட் படிப்பை முடித்துவிட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் கிரேடு-2 ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று உள்ளேன். பதவி உயர்வு பெற எனக்கு தகுதி இருந்தும், தவிர்த்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதை விசாரித்த ஐகோர்ட்டு, எனது மனுவை 8 வாரத்தில் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை எனது பதவி உயர்வுக்கான மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஆஜராகவில்லை

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு

அப்போது நீதிபதி, கோர்ட்டு உத்தரவை முறையாக பின்பற்றாத நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்டு உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் அவர்கள் இருவரையும் வருகிற 20-ந்தேதி இந்த கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவுக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்