அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சரயு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-07-13 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள்

தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின் ஆணைப்படி வெளிநாட்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. இந்த மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இந்த மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. இதனால் இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்து விட்டால் அவைகளை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று.

இந்த மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. இந்த மீன்கள் நமது நாட்டின் பாரம்பரிய நன்னீர் மீன் இனங்களையும் அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் அபாயநிலை உருவாகும்.

இந்த மீன்களை பண்ணைக்குட்டைகளிலோ, அல்லது மீன்வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், இவை மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் குளங்களில் இருந்து தப்பித்துவிட வாய்ப்பு உள்ளது.

வளர்க்க கூடாது

அவ்வாறு தப்பிச்செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகும். இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நமது உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் வழி இல்லாமல் போய்விடும்.

எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை விவசாயிகள் இருப்பு செய்து வளர்க்க வேண்டாம். ஏற்கனவே பண்ணைகளில் இந்த மீன்களை வளர்ப்பவர்கள் அழிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்ப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொடர்பு கொள்ளலாம்

மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள மீன் பண்ணையாளர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை வளர்க்கவும், புதிதாக மீன் பண்ணை அமைக்கும் விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை முதன்மை நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்