அம்மா உணவகங்களில் சீர்கேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை -மேயர் பிரியா எச்சரிக்கை

அம்மா உணவகங்களில் சீர்கேட்டில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

Update: 2023-07-28 22:39 GMT

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாதாந்திர மன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ், கம்யூனிஸ்டு, அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சி வாரியாக உறுப்பினர்கள் பேசினார்கள்.

பின்னர் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:-

காய்கறி மார்க்கெட்

தி.மு.க. கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி (வார்டு 142):- சைதாப்பேட்டையில் உள்ள காய்கறி மார்க்கெட்டை மறுகட்டுமானத்துக்கு திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு பல மாதம் ஆகியும் இதுவரை பணி நடைபெறவில்லை. மறுகட்டுமானம் செய்யப்படுமா?

மேயர் பிரியா:- சைதாப்பேட்டையில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 55 கடைகள் இயங்கி வந்தது. தற்போது காய்கறி அங்காடி 161 கடைகளுடன் நவீன முறையில் தரம் உயர்த்தி கட்டுவதற்கு திட்டமதிப்பீடு, வரைபடம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. மறு கட்டுமானத்துக்கு ரூ.25 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அரசின் நிர்வாக அனுமதி பெறவேண்டும். அதன்பிறகு டெண்டர் விடப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

காலிப்பணியிடம்

தி.மு.க. கவுன்சிலர் கணேஷன் (வார்டு 38):- சென்னையில் 200 வார்டுகளில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் நர்சுகள், ஊழியர்கள், உதவி பணியாளர்கள், ஆய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, அவசியம் கருதி காலியாக உள்ள பணியிடத்தை நிரப்பிட வேண்டும்.

மேயர் பிரியா:- மண்டலம் 4-க்கு உட்பட்ட 15 வார்டுகளில் 12 டாக்டர்கள், 15 செவிலியர்கள், 14 உதவி பணியாளர்கள் உள்ளனர். இதேபோல, காலியாக உள்ள மற்ற நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு டாக்டர்கள், நர்சுகள், ஆய்வாளர்களின் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சீர்கேட்டில் ஈடுபட்டால்...

தி.மு.க. கவுன்சிலர் பாரதி (வார்டு 152):- அம்மா உணவகங்கள் தொடங்கி இவ்வளவு நாட்கள் ஆகியும் தலைவர்கள், துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் என யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை. இதனால், நிறைய சீர்கேடுகள் நடக்கிறது.

மேயர் பிரியா:- அம்மா உணவகங்களில் சீர்கேடு நடப்பதாக பல கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். எனவே, சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் யாராக இருந்தாலும் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சீர்கேட்டில் ஈடுபடும் ஊழியர்களின் விவரங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளோம். 7 நாட்களுக்குள் அவர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆய்வு செய்யப்படும்

ம.தி.மு.க. கவுன்சிலர் ஜீவன் (வார்டு 35):- சாலையோரம் உள்ளவர்கள் தங்குவதற்கான இரவு நேர முகாம்கள் சரிவர செயல்படுவதில்லை. சில சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களே இதை கையில் எடுத்து நடத்துகிறார்கள். அவ்வாறு நடத்தக்கூடாது. இதை கண்காணிக்க வேண்டும்.

கமிஷனர் ராதாகிருஷ்ணன்:- இரவு நேர காப்பகங்களை மாநகராட்சியின் கீழ் அரசு சார்பற்ற அமைப்புகள் தான் நடத்தி வருகிறது. புகார்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்