கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை - தாசில்தார் எச்சரிக்கை
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 928 குடும்பங்களை சேர்ந்த 2,760 இலங்கை தமிழர்கள் தங்களது குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இந்த முகாம் அதிகாரியான தாசில்தாரின் கையெழுத்திட்டு ஒரு பொது அறிவிப்பு முகாமில் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளது.
அதில், 'முகாமில் வசிக்கும் சிலர் நபர்கள் குற்ற செயல்கள் மற்றும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக அளவுக்கு அதிக அளவில் மதுஅருந்தி விட்டு முகாமில் தகராறு செய்பவர்கள், கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் உபயோகிப்பவர்கள், அதனை விற்பனை செய்பவர்கள், திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள், கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு முகாமில் தகராறு செய்பவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும்.
மேலும் அவர்களின் முகாம் பதிவு ரத்து செய்யப்படுவதுடன் அவர்களின் தொடர்புடைய குடும்ப பதிவும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடும் பதிவு உள்ள குடும்பத்தினர், குற்ற செயல்களில் ஈடுபடும் பதிவு இல்லாத நபர்களை சார்ந்த குடும்பத்தினர் முகாம் மாற்றம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.