மாடுகளை பூட்டை உடைத்து மீட்டு சென்ற உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்த மாடுகளை பூட்டை உடைத்து மீட்டு சென்ற உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சீர்காழி நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-28 18:45 GMT

சீர்காழி:

நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்த மாடுகளை பூட்டை உடைத்து மீட்டு சென்ற உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சீர்காழி நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

நகர்மன்ற கூட்டம்

சீர்காழி நகராட்சியில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆணையர் வாசுதேவன், மேலாளர் காதர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருளை வருவாய் ஆய்வாளர் ராஜ கணேஷ் வாசித்தார்.தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

உண்ணாவிரத போராட்டம்

ராஜசேகரன் (தே.மு.தி.க.):- நகராட்சி வளாகத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த மாடுகளை சட்டவிரோதமாக பூட்டை உடைத்து மீட்டு சென்ற உரிமையாளர்கள் மீதும், எரிவாயு தகன மேடை கட்டிடத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொது மக்களை திரட்டி நகராட்சி முன்பு உண்ணாவிரதம் போராட்டம் செய்வேன்.

முபாரக் அலி (தி.மு.க.):- காமராஜர் வீதி, தேர் தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் தினமும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜெயந்திபாபு (சுயேச்சை):-எனது வார்டு பகுதிகளில் தினமும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

குப்பைகளை அகற்ற வேண்டும்

கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.):-எனது வார்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக முறையாக தூய்மைப் பணி மேற்கொள்ளாததால் அதிக அளவில் குப்பைகள் காணப்படுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன் (பா.ம.க.):- நகர் பகுதி முழுவதும் பராமரிப்பு பணியின் போது மின்சார துறையின் சார்பில் அகற்றப்படும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

குடிநீர் வசதி

தேவதாஸ் (தி.மு.க.):-குப்பைகளை கொட்ட இடம் இல்லை என்றால் எனது வார்டு குப்பைகளை கொட்ட நான் சொந்தமாக இடம் வழங்குகிறேன். குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

வள்ளி (தி.மு.க.):-சீர்காழி நகர மன்ற கூட்ட வளாகத்தில் நேரத்தை பார்ப்பதற்கு ஒரு கடிகாரத்தை வைக்க வேண்டும்.

முழுமதி (ம.தி.மு.க.):- எனது வார்டு பகுதிகளில் குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்

கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

தலைவர்:-சீர்காழி நகராட்சி வளாகத்திற்குள் அடைக்கப்பட்ட மாடுகளை பூட்டை உடைத்து மீட்டு சென்றவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நகர் பகுதி முழுவதும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. இதில் பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்