குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீது நடவடிக்கை
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீது நடவடிக்கை என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பள்ளி அளவிலான முதல் மட்ட குழு சிறப்பாக பணி மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு போதுமான அளவுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் முதன்மை கல்வி அலுவலர்கள் மேலாய்வு மேற்கொள்ள வேண்டும்.
பள்ளியில் சேர்க்க முயற்சி
வாரந்தோறும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும். பள்ளப்பட்டியில் மதர்ஷா தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்து மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வேட்டைக்காரன் புதூர், நீலிமேடு, ஜெகதாபி கிராமம், வடக்கு மேட்டுப்பட்டி, வெங்கக்கல்பட்டி, தேசியமங்கலம், தெலுங்காப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு `பள்ளிக்கூடம் மணியடிச்சாச்சு' என்ற திட்டத்தின் வாயிலாக பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கடும் நடவடிக்கை
10 மற்றும் 12-ம் வகுப்புகளில் 2022-23-ம் பொதுத்தேர்வுகள் எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தற்போது துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களை, அவர்களுக்கு விருப்பமான வேறு தொழிற்கல்வி பயிற்சிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
15 நாட்களுக்கு மேல் வருகை தராத மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகை புரிய வட்டார மற்றும் பள்ளி அளவிலான மூன்றடுக்கு குழு உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல் ஏற்படுத்த வேண்டும். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீதும், அவர்களை வேலைக்கு சேர்த்து கொள்ளும் தொழில் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.