கால்நடைகளை சாலையில் திரிய விட்டால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
கால்நடைகளை சாலையில் திரிய விட்டால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே, நகரப் பகுதியில் கால்நடை வளர்போர் ஆடு மற்றும் மாடுகளை தங்கள் இடத்தில் கட்டிவைத்து வளர்க்க வேண்டும். அதனை மீறி சாலையில் கால்நடைகளை திரியவிட்டால் அவைகள் நகராட்சி பணியாளர்களால் பிடிக்கப்படுவதோடு அவற்றின் உரிமையாளர்களுக்கு முதல்முறை என்றால் ரூ.2 ஆயிரமும், மறுமுறை என்றால் ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். மேலும், பிடிபடும் மாடுகள் கோசாலை எனப்படும் மாட்டுப் பண்ணையில் அடைக் கப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.