ஆர்டர்லி முறைக்கு எதிராக நடவடிக்கை: டி.ஜி.பி. சைலேந்திரபாபுக்கு ஐகோர்ட்டு பாராட்டு

ஆர்டர்லி முறையை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2022-08-18 21:40 GMT

சென்னை,

காவல்துறை குடியிருப்பில் வசித்த போலீஸ்காரர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், போலீஸ் உயர் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்து வரும் போலீஸ்காரர்களை உடனே திரும்ப பெறவேண்டும் என்று உத்தரவிட்டார். இதன்படி ஆர்டர்லிகளை திரும்ப பெறும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது.

இதையொட்டி அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, ''ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.

ஆதாயம்

அதற்கு நீதிபதி, ''காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை. ஆர்டர்லியை நல்ல விதமாக சில அதிகாரிகள் பயன்படுத்துவது இல்லை. ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், இதுகுறித்து புகார் சொல்வதில்லை. எல்லாருக்கும் ஒரு உதவியாளர் தேவைதான். அதற்காக பொதுமக்கள் பணம் வீணடிக்கக்கூடாது'' என்றார்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ''பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளோம். மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்ப பெறப்படுவார்கள்'' என்றார்.

பாராட்டு

அதைத்தொடர்ந்து நீதிபதி, ''காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ.பி.எஸ். அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளனர். அதனை டி.ஜி.பி. (சைலேந்திரபாபு) அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து அதிகாரிகள் சார்பாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆர்டர்லி முறையை ஒழிக்க அவர் எடுத்துவரும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. இதுதொடர்பான நடவடிக்கை திருப்தி அளிக்கிறது. ஒரு அதிகாரி 5 பயிற்சி பெற்ற போலீஸ்காரர்களை ஆர்டர்லிகளாக பயன்படுத்தும்போது, மாதம் ரூ.2.50 லட்சம் அரசுக்கு செலவு ஆகுகிறது. உயர் அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை குறைந்த ஊதியத்துக்கு நியமிக்கலாம்'' என்று கூறினார். இதன்பின்னர் இந்த வழக்கில் அடுத்த வாரம் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்