திட்டமிட்டு செயல்படாமல் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரயம் செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

திட்டமிட்டு செயல்படாமல் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரயம் செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-01-21 18:06 GMT

நாகர்கோவில், 

திட்டமிட்டு செயல்படாமல் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரயம் செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலந்தாய்வு கூட்டம்

குமரி மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி உள்பட பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வருவாய்த்துறை மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்படும் மனுக்கள், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

விதவைகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானவர்களுக்கு உதவித்தொகை விரைந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும். பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை விரயம் செய்யாமல், திட்டமிட்டு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இதில் தவறுகள் ஏதும் ஏற்பட்டால் தொடர்புடைய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தங்கு தடையின்றி குடிநீர்

கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பயிர்களுக்கான காப்பீடு பற்றி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விதைகள் விற்பனை மற்றும் மானியம் குறித்து வெளிப்படைத்தன்மையாக உழவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும். மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தங்கு, தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி சார்பாக செயல்படுத்தி வரும், கூட்டு குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை பணி உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பழுதடைந்த சாலையை சீரமைப்பது மற்றும் நடைபெற்று வரும் புதிய பணிகளை கோட்ட பொறியாளர் விரைந்து முடித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்