காந்தி ஜெயந்தி தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 60 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-10-02 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின் பேரிலும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் யாஷ்மின்பேகம் மற்றும் நெல்லை தொழிலாளர் இணைஆணையர் சுமதி ஆகியோர் ஆலோசனையின்படி எனது (க.திருவள்ளுவன்) தலைமையில் தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர் துணை ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர்கள் இரா.பிரேம்குமார், சி.ஹெர்மஸ் மஸ்கரனாஸ் ஆகியோர் தூத்துக்குடி பகுதியிலும், உதவி ஆய்வாளர் பெ.சூரியன் கோவில்பட்டியிலும், உதவி ஆய்வர் ஜோதிலட்சுமி திருச்செந்தூரிலும், சு.சங்கரகோமதி ஸ்ரீவைகுண்டம் பகுதியிலும் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது தேசிய விடுமுறை தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காமல், தொழிலாளர்களை பணியமர்த்திய முரண்பாட்டிற்காக 33 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், 23 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் மொத்தம் 60 நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்