விடுமுறை அளிக்காத 115 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விடுமுறை அளிக்காத 115 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சென்னை தொழிலாளர் கமிஷனர் அதுல்ஆனந்த் உத்தரவின் பேரில், கூடுதல் தொழிலாளர் கமிஷனர் உமாதேவி, வேலூர் தொழிலாளர் இணை கமிஷனர் புனிதவதி ஆகியோரின் அறிவுரையின் பேரில், வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஞானவேல் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான நேற்று திடீரென ஆய்வு செய்தனர்.
2 மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என்று 160 நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 54 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 57 முரண்பாடுகளும் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும் என்று மொத்தம் 115 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தகவலை வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஞானவேல் தெரிவித்துள்ளார்.