பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு பின் நடவடிக்கை

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

Update: 2022-11-05 18:35 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து மத்திய இணை மந்திரி (பஞ்சாயத்து ராஜ்) கபில் மோரேஷ்வர் பாட்டீல் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவரது தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கவிதாராமு உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டதாக முறைகேடு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பதில் அளிக்கையில், ''பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது தொடர்பாக கலெக்டரை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். வீடு கட்டும் திட்டத்தில் பணமானது பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அந்த பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு வந்த பணத்தை எடுத்தது யார்? பயனாளிகளின் பெயரில் யாரும் தவறாக உபயோகித்துள்ளனரா? எனவும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் தடுக்க ஆன்லைன் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு நாளைக்கு உரிய சம்பளம் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 100 நாட்களுக்கு பதிலாக 40 நாட்கள் வேலை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

முன்னதாக அறந்தாங்கி ஒன்றியம், ரெத்தினக்கோட்டை ஊராட்சியில் நரிக்குறவர்கள் காலனியில் உள்ள வீடுகளை மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் ஆய்வு செய்தார். முன்னதாக ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் மத்திய இணை மந்திரி சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்