பரமத்திவேலூர் வட்டாரத்தில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைத்தால் கடும் நடவடிக்கை
பரமத்திவேலூர் வட்டாரத்தில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கிராம ஊராட்சி மன்ற நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால் திடீரென பிளக்ஸ் போர்டுகள் ஆங்காங்கே மீண்டும் வைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நேற்று வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் பிளக்ஸ் போர்டு அச்சக உரிமையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் வேலூர் போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகளை பிளக்ஸ் போர்டு அச்சக உரிமையாளர்கள் பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூராக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி வைக்கக்கூடாது. மீறினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் வர்த்தக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனங்கள், கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பிளக்ஸ் போர்டுகளை அனுமதி இன்றி வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டு அச்சக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.