சித்தர்மலைக்கு தார்சாலை அமைக்க நடவடிக்கை
நாமக்கல் அருகே உள்ள சித்தர்மலைக்கு தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று மலைபகுதியை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாதாள சாக்கடை திட்டம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள மக்கள் நலத்திட்டங்களை தெரிவிக்க கேட்டுக்கொண்டார். இதையடுத்து நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கோரிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் நகராட்சியில் தற்போது 18-வார்டு பகுதிகளில் மொத்தம் 74 கி.மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் இருந்து வருகின்ற கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய, சேந்தமங்கலம் சாலையில் நாள் ஒன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகின்றது.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட மீதமுள்ள 21 வார்டு பகுதிகளுக்கு 325 கி.மீட்டர் நீளத்திற்கு புதைவடிகால் கழிவுநீர் பாதை (பாதாள சாக்கடை) அமைக்கவும், நாள் ஒன்றுக்கு 11 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் கூடுதலாக அமைக்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் நகராட்சி கொசவம்பட்டி குப்பை சேகரிக்கும் நிலையத்தில் நிறுவப்பட உள்ள, விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டு பகுதிகளுக்கான புதைவடிகால் திட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சித்தர்மலைக்கு தார்சாலை
தொடர்ந்து நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள சித்தர்மலைக்கு தார்சாலை அமைக்கும் பணிக்காக கலெக்டர் மலைப்பகுதிகளில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மலைப்பகுதிக்கு தற்போது உள்ள கரடு, முரடான பாதையில் ஜீப்பில் பயணம் செய்து, மலைப்பகுதியில் உள்ள இடங்களை பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தாசில்தார் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் அருளாளன், ஜெயக்குமரன், நாமக்கல் நகராட்சி பொறியாளர் சுகுமார் உள்பட அரசு அலுவலர்கள் உடனஇருந்தனர்.