விடுமுறை அளிக்காத 101 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் விடுமுறை அளிக்காத 101 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) வெங்கடாசலபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய விடுமுறை தினமான நேற்று கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து தொடர்புடைய தொழிலாளர்களுக்கு அறிவிப்பு அளிக்க வேண்டும். அதன் நகலை தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளருக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் பார்வைக்கு வைக்க வேண்டும். இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கடைகள், உணவு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 114 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் விதிமுறைகளை மீறி விடுமுறை அளிக்காத 101 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.