தளி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விவசாயி திராவகம் குடித்ததால் பரபரப்பு-ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Update: 2022-09-24 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

அடிதடி வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விவசாயி, தளி போலீஸ் நிலையத்தில் திராவகம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள தேவகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் ரெட்டி (வயது 48). விவசாயி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரமேஷ் ரெட்டி வீட்டின் அருகே உள்ள கோவில் நிலத்தில், அதே பகுதியை சேர்ந்த ராஜா (40) மண் அள்ளி கொண்டிருந்தார். இதனை ரமேஷ் ரெட்டி தட்டி கேட்டார்.

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியாக மாறியது. அப்போது ரமேஷ் ரெட்டி ஆத்திரத்தில் ராஜாவை கடுமையாக தாக்கினார். இதில் அவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜா தளி போலீசில் புகார் அளித்தார்.

திராவகம் குடித்தார்

இந்த வழக்கின் விசாரணைக்காக தளி போலீசார் நேற்று முன்தினம் ரமேஷ் ரெட்டியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு ரமேஷ்ரெட்டி மற்றும் ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது ரமேஷ் ரெட்டி கழிவறை செல்ல வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார். அங்கு கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் திராவகத்தை குடித்தார். இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தால் போலீசார் பதறினர். அவர்கள் ரமேஷ் ரெட்டியிடம் விசாரித்தபோது அவர், தான் திராவகத்தை குடித்து விட்டதாக கூறி மயங்கினார்.

தீவிர சிகிச்சை

இதையடுத்து போலீசார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரமேஷ் ரெட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடிதடி வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விவசாயி போலீஸ் நிலையத்தில் திராவகம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்