எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் மதுரை அரசு ஆஸ்பத்திரி சாதனை

எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் மதுரை அரசு ஆஸ்பத்திரி சாதனை படைத்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார்.

Update: 2022-07-26 19:15 GMT


எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் மதுரை அரசு ஆஸ்பத்திரி சாதனை படைத்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார்.

மதுரையில் ஆய்வு

மதுரை விமான நிலையத்தில் கொரோனா மற்றும் குரங்கு அம்மை தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு நடத்தினார்.

பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு வங்கி உள்ளிட்ட இடங்களில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மதுரை கலெக்டர் அனிஸ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் உள்ளிட்டோரும் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 95.55 சதவீதம், 2-ம் தவணை தடுப்பூசியை 88.5 சதவீதம் பேர் செலுத்தி இருக்கிறார்கள். பெருநகரங்களை ஒப்பிடும் போது மதுரையானது தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி இருக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு இலவசமாக போடப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இலவச தடுப்பூசி திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 3 கோடியே 44 லட்சத்து 45 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.

குரங்கு அம்மை நோய்

குரங்கு அம்மை நோயானது, தற்போது 72 நாடுகளில் வந்திருக்கிறது. இந்தியாவில் டெல்லி, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் ெதாற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் பாதிப்பு இல்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். எய்ம்ஸ் கட்டிட வடிவமைப்பு பணி நடந்து வருகிறது. இன்னும் 6 அல்லது 7 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி தொடங்கும்.

எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.40 லட்சம் மதிப்பில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகளில் எலும்பு வங்கியின் தேவை மிக முக்கியமானதாகும். தமிழகத்தை பொறுத்தவரையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மதுரை அரசு ஆஸ்பத்திரியும் எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் மகத்தான சாதனையை படைத்திருக்கிறது.

இதுவரை 36 எலும்புகள் நோயாளிகளிடம் இருந்து கொடையாக பெறப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளன. இதுபோல், உயிரிழந்த நோயாளிகள் 2 பேரிடம் இருந்து எலும்புகள், ஜவ்வுகள் எடுத்து சேமிக்கப்பட்டுள்ளன.

சேமித்த எலும்புகள் மற்றும் ஜவ்வுகள் மூலம், 7 நோயாளிகள் பயன்பெற்றிருக்கிறார்கள். அதில், ஒருவர் காவல்துறையை சேர்ந்தவர், 2 பேர் விளையாட்டு வீரர்கள். மற்றவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்கள்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து மதுரை அரசு ஆஸ்பத்திரி மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அந்த சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உள்விளையாட்டு அரங்கம் திறப்பு

இதைதொடர்ந்து மருத்துவக்கல்லூரி வளாகத்தில், முன்னாள் மருத்துவ மாணவர்கள் சார்பில் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கத்தை அமைச்சர்கள் 3 பேரும் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்