குலத்தொழிலை ஊக்குவிக்கும் என்று குற்றச்சாட்டு: மத்திய அரசு 'விஸ்வகர்மா' திட்டத்தை திரும்ப பெற வேண்டும்

மத்திய அரசு ‘விஸ்வகர்மா’ திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னையில் கி.வீரமணி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-06 21:41 GMT

சென்னை,

சிறு வணிகர்களுக்கு கடனுதவி அளிக்கும் மத்திய அரசின் 'விஸ்வகர்மா யோஜனா' திட்டம் குலத்தொழிலை ஊக்குவிக்கும் என்று திராவிடர் கழகம் குற்றம் சாட்டியது.

இந்த திட்டத்துக்கு எதிராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் 'விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தை கண்டித்து சென்னையில் செப்டம்பர் 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன், மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் புதுமடம் ஹலிம், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கருணாநிதி, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு முடி திருத்துவோர் நலச்சங்கத்தின் தலைவர் வெங்குடு பழனி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்

சதித்திட்டத்தை முறியடிப்போம்

கி.வீரமணி பேசியதாவது:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் வாரிசு அல்ல, கொள்கை வாரிசு. சாதி தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். கொள்கையாக உள்ளது.

ஒரு வாதத்துக்கு மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மோடியை அவர்கள் பிரதமராக வர விட மாட்டார்கள்.

இதுபற்றி டெல்லியில் இருந்து ஒரு தகவல் கசிந்து கொண்டிருக்கிறது. குலத்தொழிலை ஊக்குவிக்கும் 'விஸ்வகர்மா' என்ற சதித்திட்டத்தை முறியடிப்போம். இந்த போராட்டம் தொடக்கம்தான். திராவிடம் வெல்லும். இதை வரலாறு சொல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆ.ராசா எம்.பி.

ஆ.ராசா எம்.பி. பேசுகையில், 'மலேரியா, டெங்கு போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மென்மையாக சொல்லி இருக்கிறார். நாங்கள் எச்.ஐ.வி, தொழுநோய் போன்று சனாதனத்தை பார்க்கிறோம்.' என்றார்.

கே.எஸ்.அழகிரி பேசும்போது, 'இந்தியா' கூட்டணியின் பெயரை பார்த்து அஞ்சி 'பாரத்' என்று பெயர் வைக்கிறார்கள். மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் இன்றைக்கு நாம் ஒன்றுப்பட்டுள்ளோம்.' என்று கூறினார்.

தொல்.திருமாவளவன் பேசும்போது, 'தி.மு.க. இல்லாமல் 'இந்தியா' கூட்டணியே கிடையாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. காணாமல் போகும்' என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் 'விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரசார குழு செயலாளர் வக்கீல் அருள்மொழி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்றார்.

தென்சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்