சென்னை தலைமைச்செயலகத்தின் அலுவலக உதவியாளர் தூய்மைப்பணியாளர் சங்கத்திற்கு அங்கீகாரம்
சென்னை தலைமைச்செயலகத்தின் அலுவலக உதவியாளர் தூய்மைப்பணியாளர் சங்கத்திற்கு அங்கீகாரம் -தமிழக அரசு உத்தரவு.;
சென்னை,
தமிழக மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தலைமைச்செயலக அலுவலக உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கத்திற்கு அரசு அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்று அந்தச்சங்கம் விண்ணப்பித்து இருந்தது. அதை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கங்களின் அங்கீகார விதிகளின்படி அரசு ஆய்வு செய்தது.
பின்னர் அந்தச்சங்கத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்கலாம் என்று முடிவு செய்தது. அதன்படி, தலைமைச்செயலக அலுவலக உதவியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் சங்கத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்கி உத்தரவிடப்படுகிறது.
அந்தச்சங்கத்தின் சட்டத்திட்டங்களில் மாற்றம் செய்ய கருதினால், அதற்கு அரசின் ஒப்புதல் பெறப்படவேண்டும். சங்கத்தின் முகவரி, நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டால் அரசுக்கு அதை உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அரசியல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் சங்கம் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமைச்செயலக அலுவலக உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்ததற்காக, முதல்-அமைச்சர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு அந்தச்சங்கத்தின் செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.