சேலம் கோரிமேட்டில் அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் தங்களது பெற்றோருடன் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறும் போது, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறோம். நாங்கள் வெளியூர் என்பதால் கல்லூரி அருகில் உள்ள அரசு விடுதியில் தங்கி படிப்பதற்காக விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் அங்கிருக்கும் அதிகாரி தங்களுக்கு இடம் இல்லை என்று கூறினர். இதனால் வெளியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போதிய வசதி இல்லாததால் எங்களால் வெளியில் உள்ள விடுதியில் தங்கி படிக்க முடியாது. எனவே அரசு விடுதியில் தங்கி படிக்கும் வகையில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.