வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி

Update: 2022-07-24 15:22 GMT


காங்கயம் அருகே ேவன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விபத்து

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 38). இவர் காங்கயம் அருகே சிக்கரசம்பாளையம் பகுதியில் தங்கி கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். இவருடன் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (38), திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (39) ஆகியோரும் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காங்கயம் - சென்னிமலை சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் காங்கயத்தில் இருந்து சென்னிமலை நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை குமார் ஒட்டிச் சென்றுள்ளார். மற்ற 2 பேரும் பின்இருக்கையில் அமர்ந்து இருந்தனர். இவர்களுடைய மோட்டார் சைக்கிள் காங்கயம் சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது இவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ேவன் திடீரென்று சிக்னல் போடாமல் வலதுபுறம் திரும்பி உள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத குமார் நிலை தடுமாறி வேனின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிளை வேகமாக மோதியுள்ளார்.

பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற குமார் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற வெள்ளியங்கிரி, தேவராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேருக்கும் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்