திருப்பூரில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லாரி மோதி விபத்து
திருப்பூர் மங்கலம் ரோடு, சின்னாயி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் தேவானந்த் (வயது 20). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று காலை உடற்பயிற்சி செய்வதற்காக பார்க் ரோட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நூல் பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பார்க் ரோடு வழியாக வந்து கொண்டிருந்தது. காலை 7 மணிக்கு எம்.ஜி.ஆர். சிலை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தேவானந்த் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கினார்.
சாவு
அதில் அவருடைய வலது கையில் லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. கை முழுவதும் சிதைந்து போனது. வலியால் தேவானந்த் துடித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலன்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான சேலம் கோணேரிப்பட்டியை சேர்ந்த சதீஷ் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.