காங்கயம்,
ஊதியூர் அருகே பெயர் பலகை தடுப்பு சுவர் மீது கார் மோதிய விபத்தில் காடை பண்ணை மேலாளர் பலியானார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவன மேலாளர் பலி
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பெரும்மாயூரை சேர்ந்தவர் ேகாவிந்தராஜ் (வயது 42). இவர் குண்டடம் அருகே உள்ள காடைபண்ணையில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி கோவிந்தராஜ், அவருடைய மனைவி கோமதி (38), மகன் நிரஞ்சன் (10) ஆகியோருடன் கோவில் திருவிழவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் கொடுவாய் புறப்பட்டனர். இவர்களுடைய கார் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் தாராபுரம்-திருப்பூர் சாலை கொடுவாய், வெங்கடாஜலபதி தோட்டம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகை கான்கிரீட் திட்டின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோவிந்தராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மனைவி, மகனுக்கு சிகிச்சை
காயம் அடைந்த கோமதி மற்றும் நிரஞ்சன் இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.