தாய்- 2 மகன்கள் பரிதாப சாவு

Update: 2023-05-31 15:47 GMT


உடுமலை அருகே சரக்கு லாரியுடன் வேன் மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சரக்கு லாரி-வேன் மோதல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கரப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தான் என்பவரது மனைவி கருப்பாத்தாள் (வயது 70). இவரது மகன்கள் மாசிலாமுத்து (47), மகேஷ் (வயது 44).

இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த செங்கோடம்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று செங்கோடம்பாளையம் வந்த தாயார் கருப்பாத்தாளை அழைத்துக்கொண்டு மாசிலாமுத்து, மகேஷ் இருவரும் ஒரு வேனில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

2 பேர் பலி

வேனை மகேஷ் ஓட்டி வந்தார். நேற்று காலை 9.45 மணியளவில் இந்த வேன் உடுமலை அருகே சுங்காரமடக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய மகேஷ், மாசிலாமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாயும் சாவு

விபத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்குப்போராடிய கருப்பாத்தாளை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கருப்பாத்தாள் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குடிமங்கலம் போலீசார் மகேஷ், மாசிலாமுத்து ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த குடிமங்கலம் போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

சாலை விபத்தில் தாய் மற்றும் 2 மகன்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்