ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்து: பெண் உள்பட 2 பேர் பலி புவனகிரியில் சோகம்
புவனகிரியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
புவனகிரி,
புவனகிரி பங்களா பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 70). இவர் நேற்று அதிகாலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடையில் டீ குடிப்பதற்காக நடந்து சென்றார். புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக சென்ற சுற்றுலா பஸ் ஒன்று பெரியசாமி மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஒரு விபத்து
இந்த விபத்து நடந்த அதே இடத்தில் லாரி மோதி பெண் ஒருவர் பலியானார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன். இவர் நேற்று காலை தனது மனைவி பிரேமலதா (25) மற்றும் 3 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் புவனகிரி வந்தார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டார். புவனகிரி பங்களா பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் சாலை விரிவாக்க பணிக்காக மண் ஏற்றிச்சென்ற லாரி ஒன்று, கலையரசன் ஓட்டிச்சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பிரேமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலையரசன் மற்றும் 3 வயது குழந்தை காயமின்றி உயிர் தப்பினர். இருப்பினும், அவர்கள் பிரேமலதாவின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரின் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரேமலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புவனகிரியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.