கோவை நகரில் விபத்து, உயிரிழப்பு குறைந்துள்ளது

கோவை நகரில் விபத்து, உயிரிழப்பு குறைந்துள்ளது

Update: 2023-08-02 19:15 GMT

கோவை

கோவை நகரில் சிக்னல் இல்லாத போக்குவரத்து, பாதசாரிகள் கடக்க வசதி உள்ளிட்ட காரணங்களால் விபத்து, உயிரிழப்புகள் குறைந்து இருப்பதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.

கோவை நகரில் தற்போது செய்யப்பட்டுள்ள போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பவர் பாய்ன்ட் நிகழ்ச்சி நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

ரவுண்டானா- யூடேர்ன்

கோவை நகரில் போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த லாலி ரோடு, சிந்தாமணி, புரூக்பீல்டு, சுங்கம், லட்சுமி புரம் பஸ் நிறுத்தம், சங்கனூர் ஜங்சன் ஆகிய இடங்களில் சிக்னல்களுக்கு பதிலாக ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டு சீரான போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர அவினாசிரோடு பகுதியில் ஜே.எம்.பேக்கரி, எல்.ஐ.சி. சிக்னல், லட்சுமி மில் சிக்னல், எஸ்ஸோ பங்க், பி.எஸ்.ஜி. சிக்னல், பயோனீர் சிக்னல், பன்மால், ஹோப் கல்லூரி, சி.எம்.சி., விமான நிலையம் பகுதிகளில் சிக்னல்களுக்கு பதிலாக யூடர்ன் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதில் உள்ள சில குறைகளும் நீக்கப்பட்டுள்ளன. திருச்சி ரோடு சிங்காநல்லூர் பஸ்நிலைய சிக்னல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யூ டேர்ன் வசதி மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது.

பாதசாரிகளுக்கு வசதி

யூடேர்ன் பகுதிகளில் வாகனங்கள் தொடர்ந்து செல்லும்போது, பாதசாரிகள் சாலையை கடப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. காந்திபுரம் பஸ் நிலைய பகுதியில் பொதுமக்களே பச்சை நிறவிளக்கு பொத்தானை அமுக்கி, சாலையை கடக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது சுங்கம் பகுதியிலும் செய்யப்பட உள்ளது. மேலும் சிக்னல் பகுதி எடுக்கப்பட்டு யூடேர்ன் வசதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் பாதசாரிகள் எளிதில் கடக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சாலைகளில் அதிவேகமாக வாகனங்களில் செல்பவர்கள் குறிப்பாக அவினாசிரோடு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அதி வேகமாக வாகனங்கள் ஓட்டிச்செல்வதை தடுக்க ரேடோர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகமாக செல்பவர்கள்மீது அபராதம் விதிக்கப்படும்.

உயிரிழப்பு குறைந்தது

கோவை நகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகளால் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம்வரை நகரில் நடைபெற்ற விபத்தில் 139 பேர் பலியாகினர். இந்தஆண்டு ஜூன் மாதம்வரை 119 பேர் இறந்துள்ளனர்.கடந்த ஆண்டைவிட விபத்து உயிரிழப்பு 20 குறைந்துள்ளது. உயிரிழப்பு இல்லாத விபத்துகள் கடந்த ஆண்டு 413 நடைபெற்றது. இந்த ஆண்டு 369 மட்டும் நடைபெற்றுள்ளது.விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய நடைமுறை

சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மனுநீதி கூறும்போது, ஆர்.ஜி.புதூர் பகுதியில் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைப்பதிலும் சிரமம் இருந்தது. அதில் வேகத்தடை அமைக்க வேண்டிய கட்டாயத்தை சுட்டி காட்டி வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. விபத்து குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் கூறும்போது, யூடேர்ன் பகுதியில் பாதசாரிகள் மேம்பால தூண் வழியாக கடக்க புதிய முறையும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பாதசாரிகள் கடக்கும்போது அந்த பகுதியில் மட்டும் ரெட் சிக்னல் விழுந்துமற்ற பகுதியில் சீரான போக்குவரத்து நடைபெறவும் வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்