மணல் லாரிகளால் தொடரும் விபத்து: வாங்கலில் கடையடைப்பு-மறியல்

மணல் லாரிகளால் தொடரும் விபத்து குறித்து நடவடிக்கையும் எடுக்காததால் வியாபாரிகள் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-08 18:49 GMT

 மணல் லாரிகள்

கரூர் மாவட்டம், வாங்கல் கடைவீதியில் ஓட்டல், கறிக்கடை, வணிக வளாகங்கள் என 500-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாங்கல் கடைவீதி வழியாக குவாரிகளில் இருந்து அள்ளப்பட்ட மணல் லாரிகளில் ஏற்றப்பட்டு வேகமாக சென்று வருகின்றன. மேலும் லாரிகளால் அந்த பகுதியில் விபத்துகளும் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள், குழந்தைகள், வாகன ஓட்டிகள், கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதையடுத்து மணல் லாரிகள் வாங்கல் கடைவீதி வழியாக வருவதை தடுத்து உடனடியாக மாற்றுவழி ஏற்படுத்தி அனுப்ப வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு வாங்கல் போலீஸ்நிலையத்தில் வாங்கல் கடைவீதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து வாங்கல் கடைவீதி வழியாக மணல் லாரிகள் சென்று வந்தன.

கடையடைப்பு

இந்நிலையில் மணல் லாரிகள் கடைவீதி வழியாக வருவதை தவிர்த்து மாற்றுப்பாதையில் செல்ல வலியுறுத்தி வாங்கல் ஊர்பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் நேற்று வாங்கல் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வாங்கல்-மோகனூர் சாலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆலோசனை கூட்டம்

பின்னர் மண்மங்கலம் வட்டாட்சியர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் தலைமையில் அந்த பகுதியில் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 15 நாட்களுக்குள் மணல் லாரிகள் மாற்றுப்பாதையில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். நேற்று காலை முதல் இரவு வரை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்