விபத்தில் இறந்த ராஜஸ்தான் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடியே 2 லட்சம் இழப்பீடு

தஞ்சையில் நடந்த மக்கள் நீதிமன்ற சமரச தீர்வின்படி, விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடியே 2 லட்சம் இழப்பீடுக்கான காசோலை வழங்கப்பட்டது.

Update: 2023-06-09 20:52 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் நடந்த மக்கள் நீதிமன்ற சமரச தீர்வின்படி, விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடியே 2 லட்சம் இழப்பீடுக்கான காசோலை வழங்கப்பட்டது.

விபத்து

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமித்குமார் பொடார் (வயது46). இவர் திருச்சி கோட்டை பகுதியில் தங்கி தனியார் பேட்டரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி-செங்கிப்பட்டி சாலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி அமித்குமார் பொடார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.இதனால், பலத்த காயமடைந்த அமித்குமார் பொடார் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த விபத்திற்கு இழப்பீடு கோரி தஞ்சை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம்) வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிறப்பு மாவட்ட நீதிபதி வடிவேல் விசாரித்து வந்தார்.

ரூ.1 கோடியே 2 லட்சம் இழப்பீடு

மேலும் மக்கள் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் சமரச தீர்வு காணப்பட்டது. இதையடுத்து விபத்தில் இறந்த அமித்குமார் பொடார் வாரிசுதாரர்களான அவரது மனைவி மீனு (42), மகள்கள் சாரு (15), யாஷிகா (10), மகன் குணால் (6), அம்மா பிரபா (74) ஆகியோருக்கு ரூ.1 கோடியே 2 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டது.இதையடுத்து அமித்குமார் பொடார் வாரிசுதாரர்களின் வக்கீல் அமர்சிங்கிடம் ரூ.1 கோடியே 2 லட்சத்திற்கான காசோலையை சிறப்பு மாவட்ட நீதிபதி வடிவேல், விபத்து தீர்ப்பாய சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி ஆகியோர் முன்னிலையில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவன வக்கீல் கிருஷ்ணசாமி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்