கடலூர் அருகே விபத்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி டாக்டர் சாவு

கடலூர் அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் டாக்டர் பலியானார்.

Update: 2023-05-09 20:13 GMT

திருச்சி மாவட்டம் தென்னூர் அண்ணாநகரை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் விக்னேஸ்வரன் (வயது 30). டாக்டரான இவர், புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மகப்பேறு மருத்துவம் படித்து வந்தார். இதற்காக அவர் தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மருத்துவக்கல்லூரிக்கு சென்ற விக்னேஸ்வரன், அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து செல்போனில் அவரது நண்பர்கள் தொடர்பு கொண்ட போது, விக்னேஸ்வரன் நீண்ட நேரமாக செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் பதறிய அவரது நண்பர்கள், பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையே நேற்று மாலை ரெட்டிச்சாவடி அருகே உள்ள சிறிய பாலத்தின் கீழே விக்னேஸ்வரன் இறந்து கிடந்தார்.

தடுப்புச்சுவரில் மோதி பலி

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று முன்தினம் இரவு மருத்துவக்கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது, ரெட்டிச்சாவடி அருகே உள்ள ஒரு பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி விக்னேஸ்வரன் பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்